INFOS SMART

Friday, May 1, 2020

திருமந்திரம்- பிறவி

திருமூலர் தனது திருமந்திரத்தில் மனித உடலிலும், உடலுக்கு அப்பாலும் உள்ளது ஆன்மா ஒன்றே என்று கூறுகிறார்.

இதனை "கூடு விட்டுக் கூடு பாயக் கூடியது" என்றும் கூறுகிறார்.

அதாவது, ஒரு பிறவியில் நற்பெயர் எடுத்தவன் தனது உடலால் மட்டுமே இறக்கிறான்.

ஆனால் அவனது ஆன்மாவானது மற்றொருவரின் உடலில் ஏறி இந்த உலகிற்கு நல்லவற்றை செய்து கொண்டே தான் இருக்கிறது.

"பாலை" வைத்து ஆன்மாவை இவ்வாறு விளக்குகிறார் கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள். பாலுக்குள் நெய் மறைந்திருக்கிறது.

ஆனால் அது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. பாலை நாம் எதுவும் செய்யாமல் அப்படியே வைத்து விட்டால் அது மறுநாளே கெட்டுப் போய்விடும்.

சரி, இந்தப் பாலை அப்படியே வைக்காமல் அதைக் காய்ச்சி உறை ஊற்றி வைத்துவிட்டால் மறுநாள் அது கெட்டுப் போகாமல் தயிராக வாழ்ந்து கொண்டிருக்கும்.

தயிரைக் கடைந்து மோரும் வெண்ணையுமாக பிரித்துவிட்டால், அதே பால் அடுத்த நாளும் உருவகங்கள் மாறி வாழ்ந்து கொண்டிருப்பதாகிறது.

வெண்ணெய் ஒரு வாரம் வரை கெடாது. அதன் பின்பு கெட்டுப் போய் விடும். அந்த அழிவிலிருந்து அதைப் பாதுகாக்க வேண்டுமானால் அதை நெய்யாக்கிவிட வேண்டும்.

நெய்யின் சிறப்பியல்பு என்னவென்றால் "உலகம் அழியும் வரை அதுவும் அழியாது"

ஒரே நாளில் கெட்டுப் போகக் கூடியதான பாலுக்குள்ளேதான் யுக முடிவு வரை கெடாமலிருப்பதான நெய் இருக்கிறது.

அதை அப்படியே விட்டுவிட்டால் பாலோடு சேர்ந்து அதுவும் கெட்டுப் போகிறது. ஆனால், அதை தனித்துப் பிரிந்துவிட்டால் நிரந்தரத்தன்மையைப் பெற்று விடுகிறது.

இவ்வாறு, "அழியக் கூடியதான தேகத்துக்குள் அழியாததாகிய ஆன்மா இருக்கிறது"

அந்த ஆன்மாவே "தான்" என்று அதனை உணர்ந்து, தேகத்தோடு சம்பந்தப்படுத்தாமல் எவன் வாழ்கிறானோ, அவன் அழிவிலிருந்து அழிவற்றதுக்குப் போய் விட்டான் என்று பொருள்.

மற்றவர்களெல்லாம் தேகத்தையே தாங்கள் என்று கருதிக் கொண்டிருப்பதால் தேகம் அழியும் போது தாங்களும் அழிவதாக உணருகிறார்கள்.

ஆனால், "ஆன்மாவை உணர்ந்தவர்களே தனக்கு மரணமே இல்லை என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள்"

No comments:

Post a Comment